Saturday 28 January 2012

(ஆ)சாமி வரம்




இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான்.
‘ஏன் வீட்டுக்காரர் வரேல்லையே?’
அப்பா கேட்டார்.
‘இல்லை அண்ணை நாளை வீரபத்திரர் கோயில் கொடியேறுது, அதான்..’ சின்னமணி இழுத்தான்.
அப்பா வீட்டுக்குள் வந்து பார்த்தார்.
‘என்ன இன்னும் வெளிக்கிடேல்லையே?’ பார்வை கேள்வியாய் விழுந்தது.
அடிவளவில் கட்டியிருந்த மாடு எதற்கோ கத்தியது.
அப்பா வீட்டில் இன்றியரவு நிற்க மாட்டார் என்று அந்த மாட்டுக்கும் தெரியுமோ?
அப்பாவுக்கு பிள்ளைகளைவிட வளர்ப்பு பிராணிகளிடம் பாசம் அதிதம்.
மாடுகள்..ஆடுகள். நாய்..
‘அண்ணை! இரண்டு செம்மறியாடு வேண்டி விடுங்கோ, வீட்டுக்கு நல்லது’ யாரோ சொன்னதற்காய் செம்மறியாடும் வீடு வந்து சேர்ந்து நாலு மாதங்களிருக்கும்.
‘கெதிப்பண்ணுங்கோ!’ அப்பா துரிதப்படுத்துகிறார்.
‘கமலம் மாமி வீட்டை இண்டை படங்கள் போடுகினமாம்.. இந்த நேரம் பாத்து அப்பா இஞ்ச போவம் எண்டு அவசரப்படுத்துகிறார்’ அக்கா காதில் சொன்னாள்.
கார்த்திக் படமாம். அக்காவிற்கு கார்த்திக் படமென்றால் உயிர். கொம்பாஸ் பெட்டியில் இருந்த கார்த்திக்கின்போட்டோவைப் பார்த்துவிட்டு அப்பா ஆடின சந்நதம் மறக்க முடியாதது.
அப்பா மிகவும் நல்லவர். தானுண்டு தன் வேளையுண்டு என்றிருப்பவர். எங்களின் குறும்புகள்தான் சிலசமயங்களில் அவருக்கு கோபத்தை உண்டுபண்ணும். திருந்துங்கள் அம்மாவின் ஆதரவான அணைப்பு எப்போதும் இருக்கும். களவில் படம் பார்க்கப்போன எனக்கு கம்பி காய்ச்சி சூடு போட்ட அப்பா, தூரமாய் போய்விட, அம்மா அழுதபடி மருந்து போட்டதும் மறக்க முடியாதது.
பூட்டிய கதவை மீண்டும் ஒருதடவை சரிபார்த்துவிட்டு லொறியில் ஏறினார் அப்பா.
படலைக்கு வெளியில் வந்து தன்வெறுமையை தன் பாஷையில் சொல்லி அழுதது எங்கள் ஸீஸர். பாவம், சின்னக் குட்டியில் வந்தது. இப்ப வளர்ந்திட்டுது.
கிறவல் ஒழுங்கை விலகி கார் ரோட்டு வந்துவிட்ட லொறி தனது வேகத்தை அதிகப்படுத்தியது.
குளிர்காற்று முகத்தில் விழ.. •கமாக இருந்தது.
அக்கா வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சின்னக்கா அம்மாவுடன் ஏதோ கு•கு•த்தபடி இருந்தாள்.
கமலம் மாமி வீட்டில் படம் பார்க்க போகேலாமப் போய்விட்டது என்ற கவலை அவளுக்குத்தான்.
வழியில் வாசிகசாலை ஒன்றில் சீர்காழியின் பாடல் போய்க் கொண்டிருந்தது.
அம்மா ‘முருகா’ என்றாள்.
‘மாட்டிற்கு தவிடு புண்ணாக்கு வைச்சனியே’ அப்பா கேட்டார்.
அம்மா ‘ம்’ கொட்டினாள்.
மனுஷனுக்கு எப்பவும் மாடாடென்ற எண்ணம்தான். சொல்லவில்லை. எப்போது அப்பாவிடமிருந்து தாலியை வாங்கிக் கொண்டாளோ அப்போது முதல் மெளனம்தான்.
அக்கா மட்டும் சிலசமயம் அப்பாவுடன் வாய் காட்டும். இப்ப அவளும் திருமணமாகிப் போய் மூன்று வருடங்களாகியும் பிள்ளைகள் இல்லையென்று அத்தானின் கோபத்திற்கு ஆளாகி வீடு வந்துவிட்டாள்.
கோயில் வந்துவிட்டது.
அம்மன் கோயில்.. பெயர் பெற்ற கோயில்.. அதில் செவ்வாய், வெள்ளியில் இடைவிடாமல் பூஜை நடக்கும்.
அழைத்து வரத் தொடங்கினார்.
அக்காவுக்கும் குழந்தை கிடைத்து.. அவர் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வந்தோம்.
எனக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. வயது அதிகமாகி விடாததினாலோ என்னவோ புதினம் மாதிரித்தான் எல்லாம் தென்பட்டது.
அப்பாவும், அம்மாவும் கண்களை மூடிய படி சாமி சொல்வதையே கேட்டபடி இருப்பர். பெரிய அக்கா கலங்கிய கண்களுடன் மூலையில் உட்கார்ந்திருப்பார். சின்னக்கா தன் புதிய சிநேகிதியுடன் அரட்டையில் இருப்பாள்.
ஆறு மாதங்கள் தொடர்ந்தன.
சின்னமணிக்கும் பிள்ளைகள் இங்கு வரத் தொடங்கினபோதுதான் கிடைத்தனவாம்.
எனக்கு இதைப் பார்க்க டாக்டர் கோவூரின் கதைகளே ஞாபகத்திற்கு வரும்.
விடிய இன்னமும் நேரமிருந்தது.
சாமியாடி ஒரு பெண்ணை அந்த தென்னை மரத்தில் கட்டியிருந்தார். அவளுக்கு சவுக்கினால் அடித்து.. அவள் களைத்தபின், அவளின் தலைமயிரை பிடித்து தென்னை மரத்தில் பதித்து ஆணிஅடித்ததும்.. பெண்ணும் மயங்கி, சாய்ந்து கிடந்த பெண்ணின் பெற்றவர்களும் பயந்தபடி இருந்தனர். பேய் கழிந்துவிட்டதாம். அருகில் ஆணி.. தலைமயிர்ச்சுருள்.. தென்னை மரம்.. கற்பூர ஒளி.. சாம்பிராணிப் புசை ஞாபகத்தில் வர.. பயம் அதிகரித்தது.
சின்னமணி லொறியில் படுத்திருந்தார்.. அப்பா ஆண்களுடன் மணலில் படுத்திருந்தார்.
கழிப்பு கழிக்கவென வந்திருந்த பெண்கள் தனியே படுத்திருந்தனர். மயான அமைதி..
யாவரும் அசதியுடன் தூங்கிவிட்டனர்.
பெரிய அக்காவும் அந்த அறைக்குள்தான்.. சின்னக்கா அம்மாவுடன்.. எனக்குத் தூக்கம் வரவில்லை.
திடீரென.. ஐந்துமணி இருக்கும்.. விடியவில்லை.. இருள் இன்னமும் அகலாத பொழுதில்.. பயந்தபடி படுத்திருந்த என்னை அந்த ஒலி எழுந்து உட்கார வைத்துவிட யாவரும் விழித்துவிட்டனர்.
தென்னை மரத்தைப் பார்த்தேன்.. இருளில் மர்ம உருவம் தெரிந்தது.
திரும்பி ஒலி வந்த திசையை பார்த்தேன்..
ஒரு பெண்ணின் ஆவேச அலறலைத் தொடர்ந்து ஒரு ஆணின்அவலமான..ஈனமான.. மரணத்திற்கு முன்பான ஒலியும் கேட்டு அடங்கியது.
யாவரும் எழுந்து நடந்தனர்.
அக்கா நின்றிருந்தாள்.. தலைவிரி கோலமாக..
தேங்காய் எண்ணெய் விளக்கின் ஒளியிலும் அவளின் கோபக் கண்கள் பிரகாசமாய் தெரிந்தன.
ஏதோ நடந்திருக்கிறது? மண்டையில் உறைக்க எனக்குகணப்பொழுது பிடித்தது. மாறாக மற்றவர்கள் வாய்பிளந்து நின்றனர்.
‘அக்கா..! அக்கா..!’
கண்ணகியை நினைவு படுத்தினாள்.
அருகில் இரத்தவெள்ளத்தில்.. பிள்ளைவரம் வேண்ட அல்லது பில்லை சூன்யம் அகல வந்து தரிசனம்வேண்டிய எல்லோரும் சாமியாகி விட்ட அந்த வல்லிபுரம் என்கிற சாமி.. சுடலைமாடனை வாட்டுவதாக.. கொள்ளிவாய் பிசாசுவை விரட்டுவதாக.. பிள்ளவைரம் கொடுப்பதாக நம்ப வைத்து சாமியாடிய.. அந்த அவன்.. பிணமாகக் கிடந்தான்.
‡ முல்லை அமிழ்தன்,
நன்றி:மேகம்